இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

அடுத்தடுத்த அரசுகள் தவறவிட்ட வாய்ப்பும்.... சென்னை மக்களின் தவிப்பும்...

November 2, 2017
Image

சந்திர பாரதி

கட்டுரையாளர்

Image

2015ம் ஆண்டு சென்னையைத் தாக்கிய மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கும் வடு மறக்க முடியாதது. இதற்கு பல காரணங்களையும் குற்றச்சாட்டுகளையும் பொது மக்கள் முன் வைக்கின்றனர். அரசின் மெத்தனம், அரசு அதிகாரிகளின் உடனடி முடிவெடுக்கும் திறமைப் பற்றாக்குறை, நீர் மேலாண்மையில் தெளிவற்றதன்மை, துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பில் குறைபாடுகள், பேரிடரை எதிர் கொண்டு சமாளிக்க போதிய அனுபவமின்மை, எதெற்கெடுத்தாலும் அரசின் தலைமையிடம் உத்தரவை எதிர் பார்க்கும் அவல நிலையில் மூத்த அதிகாரிகள், போன்ற பல குற்றசாட்டுகள் பலராலும் பல்வேறு தளங்களில் வைக்கப்படுகின்றன.

ஆனால், இவை மட்டுமே காரணமில்லை. பல ஆண்டுகளாக மக்கள் நலன் பேணும், திறமையும் தொலைநோக்கும் உள்ள அரசியல் தலைமை இல்லாததே இப்பேரிடருக்குக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது. இப்பேரிடருக்கு நீண்ட காலத்திற்கு முன்பே விதை விதைக்கப்பட்டு விட்டது. ஆம். வேகமாக வளர்ந்து வரும் சென்னை நகரின் நெரிசலைக் குறைக்கும் வண்ணமும், திட்டமிட்ட நகரம் ஒன்றை உருவாக்கவும் 1990களில் “புதிய சென்னை” திட்டம் முன் மொழியப்பட்டு, 1991 இல் திட்ட வரைவு உருப்பெற்றது.

அப்போது ஆட்சியிலிருந்தது அதிமுக. சென்னைக்கு தென்மேற்கே புதிய துணை நகரம் உருவாக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது. இதன் வரைவுத் திட்டம் 1997 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் வரைவு திட்டத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம், செயல்படுத்தப்பட்டிருந்தால் திட்ட வரைவின் படி ஒரு திட்டமிடப்பட்ட நகரம் உருவாகியிருக்கும். இந்நகர்புறத் திட்ட வடிவமைப்பில் நீராதாரங்களும் நீர்வழி பாதைகளையும் பேணப்பட்டு, இயற்கையான வடிகால்கள் சிதைக்கப்படாமல் சிறந்த கட்டமைப்புடன் கூடிய நகர்ப்புறம் உருவாகியிருக்கும்.

2015ல் சென்னை கண்ட பேரிடராகட்டும், இரண்டு நாள் மழைக்கு ஊரே தேங்கிநிற்கும் இன்றைய அவலமாகட்டும்; இரண்டுமே தவிர்க்கப்பட்டிருக்கும். நீராதரங்களான ஏரி, குளங்கள், நீர் வழிப்பாதைகள் மீது ஆக்கிரமிப்புகள் இடம் பெறாமல் இருந்திருக்கும். இந்த துணைநகரத்திற்கான வரைவு திட்டத்தில் புதிய சென்னை நகரத்திற்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் விஸ்தீரணம் செம்பரம்பாக்கம் ஏரி பாசனத்திற்குட்பட்ட 13000 ஹெக்டேர்கள். இது 1990-களில் இருந்த சென்னையின் பரப்பளவில் 75%க்கு சமம்.

பாசன ஏரியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியாக மாறியதும் இந்த காலகட்டத்தில் தான். செம்பரம்பாக்கம் ஏரியின் ஆயக்கட்டு பகுதிகளில், 1586 ஹெக்டேர் நிலம் விவசாயம் தவிர்த்த பிற பயன்பாட்டில் இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் வழங்கும் ஏரியாக மாற்றப்பட்டபின் பாசன வசதிக் குறைவால் மீதமுள்ள மற்ற நிலங்களும் நகர்மயமாக்க தேவையான நிலப்பகுதிகளாக உருப்பெரும் வாய்பிருந்தது. 

எந்த புதிய வளர்ச்சித் திட்டத்திலும் தனியார் பங்களிப்பு நிச்சயம் இடம் பெறும். அந்த வகையில் குடியிருப்புத் தேவைகளுக்காக நிலம் தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டாலும், அதனை சிம்டிஏ வின் வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என திட்ட வரைவு வலியுறுத்தியது. சாலைகள், குடி நீர் மற்றும் கழி நீர் பாதைகள் நகர வளர்ச்சி திட்டப்படி அமைக்கப்படுவதை சிம்டிஏ கண்காணிக்க வேண்டும் எனவும் அத்திட்ட விரைவில் பரிந்துரைக்கப்பட்டது. 

பல நல்ல அம்சங்களைக் கொண்ட இத்திட்டம் அதிமுக அரசால் அதன் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக கண்டு கொள்ளப்படவில்லை. பின் வந்த திமுக அரசு, விவரமான அறிக்கை தயாரிக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. மேலும் ஒரு தனியார் நிறுவனத்தை அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் வரைபடம் தயாரிக்க பணியமர்த்தியது. அரசியல் காரணங்களால் அன்றைய திமுக அரசு நீண்ட கால மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் குறுகிய காலத்திற்குள் முடிக்கக் கூடிய திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்தது. இதனடிப்படையில் இயங்கிய திமுக அரசு, 2000ம் ஆண்டில்  “புதிய சென்னை” திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ மூடுவிழா நடத்தியது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த துறையை மூடியது. மாற்றாக போக்குவரத்துக்காக விரைவு இரயில் திட்டத்திற்கு வித்திட்டது. இதில் அரசியலைத் தவிர வேறுகாரணமில்லை.

மூடியதற்குக் காரணமாக சொல்லப்பட்டது பெரும் தொகை நிதியாதாரமாக தேவையென்பதும் திட்டம் நிறைவேற நீண்ட காலம் பிடிக்கும் என்பதே. ஆனால் உண்மை இதற்குப் புறம்பாகவேயிருந்தது. இத்திட்டத்திற்காக அரசின் முதலீடு குறைந்த அளவே தேவைப்பட்டது. புதிய நகரத்தில் குடியிருப்புப் பகுதிகளை கட்டமைக்க தனியார்கள் பங்களிப்பு இயற்கையாக வரும் பட்சத்தில், கட்டமைப்பை வரைமுறைப்படுத்துவதும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்வது மட்டுமே அரசின் பணியாக இருந்திருக்கும். அரசு இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டாலும், 2002 -க்குள் ஆக்கிரமிப்புகளும் வரைமுறைப்படுத்தப்படாத கட்டடங்களும் இப்பகுதிகளில் தோன்றி திட்டமிட்ட புதிய சென்னை திட்டம் இனிமேல் சாத்தியமில்லை என்ற சூழலை உருவாக்கிவிட்டன. 

13000 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிட்தட்ட 6000 ஹெக்டேர் நிலப்பரப்பு குடியிருப்பு மற்றும் தொழில் வளாகப்பகுதிகளாக சிம்டிஏ அறிவித்திருந்தது. அவற்றில் 1200 ஹெக்டேர் பரப்பு மட்டுமே முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. மீதி நிலப்பரப்பு வரைமுறையற்ற வளர்ச்சியும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியிருந்தது. புதிய சென்னை திட்டம் மடிந்து போனது. அடுத்தடுத்த வந்த அரசுகளும் அதிகாரிகளும் முறையாக செயல்பட்டிருந்தால் திட்டமிட்டு நகர்ப்புற வளர்ச்சியுடன் கூடிய நகரம் உருவாகியிருக்கும். சென்னை நகரின் புற நகர் பகுதிகள் எந்த வித வசதியுமின்றி பெருகின. இதற்கு பல்வேறு மட்டங்களில் உலவும் ஊழலே காரணம். எந்த வித படிப்பறிவும் பட்டறிவுமில்லா பஞ்சாயத்து தலைவர்கள் விதிமுறைகளை பற்றி அறியாமலும், தன்னிச்சையாகவும் 30- 40 மாடி கட்டிடங்களுக்குக் கூட இன்றும் அனுமதி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டம் 1976 லும், இரண்டாவது திட்டம் 2008 லும் சிம்டிஏ வால் உருவாக்கப்பட்டு அரசின் ஒப்புதலை பெற்றது. செயற்கைக் கோள் நகரங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் பற்றிய அறிவிப்புகள் அதிமுக, திமுக ஆட்சிகளால் வெளியிடப்பட்டன. ஆனால், நகர்ப் புற வளர்ச்சித் திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே இருந்தன பின்பற்றப்படவில்லை. 2015 வெள்ளப் பெருக்கில் இத்தகைய பூங்காக்கள் இருந்த பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது அதற்கு சாட்சியாக உள்ளன. அதிகபட்ச நகர்மயமான மாநிலங்களில் முதன்மையாக விளங்குவது தமிழ்நாடு. ஆனால் இங்கு தான், 2015 வெள்ளத்திலும், இன்றைய மழையிலும் சென்னை மாநகரம் சிக்கி திக்குமுக்காடுகிறது.

இந்த நேரத்திலாவது அரசியல் கட்சிகள் தங்களது வேறுபாடுகளைக் கைவிட்டுவிட்டு ஒன்று பட்டு சென்னை நகரையும் வெள்ளத்தாலும், மழைநீர் தேங்கல்களாலும் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளையும் சீரமைத்து கட்டமைக்க முன் வர வேண்டும். உறுதியான முடிவுகளும் திட்டங்களும் நடைமுறைப்படுத்த அரசியல் திண்ணமும் மட்டுமே இப்போதைய தேவை. வாக்குறுதிகளும் அறிக்கைகளும் அல்ல. சென்னை மாநகரம் மீண்டும் ஒரு பேரிடரைத் தவிர்க்க நீர்வழிப்பாதைகளையும் நீர் நிலைகளையும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்க வேண்டும். சென்னை நகரின் நெரிசலைக் குறைக்க, ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க சென்னைக்குப் புறம்பே செயற்கைக் கோள் நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்நகரங்கள் சரியான திடமிடுதலுடன், இயற்கையான நீர் நிலைகள், நீர் வழிப்பாதைகள், வடிகால்கள், ஆகியவற்றை சிதைக்காமல் திட்டமிடப்பட வேண்டும். அரசோ, தனியாரோ இவற்றை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்புச் செய்பவர்கள் துரிதமாக தண்டிக்கப்பட வேண்டும். அளிக்கப் படும் தண்டனை மற்றொருவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். புற நகர்ப் பகுதிகளில் சென்னையில் தொழில் வேலை நிமித்தம் வருவோர் பயன்பாட்டிற்காக நல்ல தரமான சாலை மற்றும் போக்குவரத்து வசதி, சுகாதாரமான குடி நீர், மின்சாரம் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். 

பின் வரும் சந்ததியனராவது இது போன்ற பேரிடர்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் எழாமலிருக்க திட்டமிட்டு காரியமாற்ற வேண்டிய தருணமும் இது தான். மக்களின் உறுதிப்பாடும், கோரிக்கையும் இது தான்!

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )